அம்புலி காட்டி அமுதினை ஊட்டும் அன்னை

Image result for adi parasakthi

வாசல் கதவைத் திறந்த ஜனனி திடுக்கிட்டுப் போனாள். மீனா சித்தி!  இவள் தாயின் தங்கை. எங்கோ மகனுடன் துபாயில் வாழ்ந்து வந்தவள். தொடர்பு விட்டுப் போய் பல நாட்கள் ஆகி விட்டன. இன்று இவள் வீட்டு வாசலில் வந்து நிற்கிறாள்!  ‘‘சித்தியா, வா வா சித்தி!’’ அன்புடன் ஜனனி அவளை வரவேற்றாள்.‘‘எப்படி இருக்கே ஜானு? உன் கல்யாணத்துக்கு வர முடியல்லை அக்கா பத்திரிகை அனுப்பி லெட்டர் போட்டிருந்தாள்...’’ ‘‘பரவாயில்லை சித்தி இப்பவாவது வந்தியே.’’ ‘‘நான் எத்தனை எத்தனையோ நல்ல நல்ல சந்தர்ப்பங்களை இழந்திருக்கேன். 

அதே போல அக்கா இறந்த போதும் கூட எனக்கு தாமதமாகத்தான் செய்தி தெரிந்தது. அதை விடு. அது பழைய கதை. ’’ ‘‘என்ன சாப்படறே சித்தி?’’ ‘‘ஒண்ணும் வேண்டாம்மா. இப்பத்தான் கல்யாண வீட்டிலே சாப்பிட்டேன்.’’ ‘‘கல்யாண வீடா?’’ ‘‘ஆமாம் என் மருமகள் வீட்டுக் கல்யாணம். என்னை துபாயிலே தனியா விட முடியாதுன்னு என்னையும் கூட்டிண்டு வந்துட்டான், என் மகன்.’’ ‘‘ரொம்ப சந்தோஷம் சித்தி இப்பவாவது உன்னைப் பார்க்க முடிஞ்சுதே.’’ ‘‘உன் கல்யாணத்துக்குத் தான் வர முடியல்லை... இந்தா இதை வாங்கிக்கோ,’’ என்று சொல்லி ஒரு கிஃப்ட் பார்சலைத் தந்தாள் சித்தி.

‘‘என்ன சித்தி இது?’’ ‘‘வேற என்ன,  துபாயிலே கிடைக்கற பேரீச்சம்பழ சாக்லெட், அப்புறம் ஒரு சில்க் புடவை... என்னால முடிஞ்சது...’’ ‘‘தேங்க்யூ சித்தி.’’ சித்தி தயங்கித் தயங்கிப் பேசினாள். ‘‘எனக்கு ஒரு உபகாரம் செய்யணும் ஜானு...’’ ‘‘சொல்லு சித்தி.’’ ‘‘இந்தா இதை வாங்கிக்கோ,’’ என்றவள் காசிப் பட்டால் சுற்றப்பட்ட ஒரு மூடிய ஸ்வாமி மண்டபத்தைத் தந்தாள். ‘‘என்ன சித்தி இது?’’ ‘‘இதை எடுத்துண்டு வரதுக்குள்ளே நான் பட்ட பாடு...  பாலா அம்பாள். நான் பூஜை செய்யும் தெய்வம், என் தாய்...’’‘‘சித்தி...!’’ ஜனனி அதிர்ந்தாள். 

‘‘ஆமாம்மா. தினமும் நான் பூஜை செய்யும் என் தாய். என்னால் முடிஞ்ச பால், பழம், திராட்சை, டேட்ஸ்... இப்படி நைவேத்தியம் செய்வேன், ஒருநாள்கூட அவளை நான் பட்டினி போட்டதில்லை. ஆனா, என் மருமகளுக்கு இதெல்லாம் பிடிக்காது. என் பிள்ளையோ இதிலே எல்லாம் தலையிட மாட்டான். இன்னும் ஒரு வாரம் இந்த ஊருலேதான் இருப்போம். கல்யாண சத்திரத்திலோ, வீட்டிலோ இந்தப் பூஜைக்கு இடம் எதிர்பார்க்க முடியுமா? அதனால, ஒரு வாரம், ஒரே ஒரு வாரம் அம்பாளை உன் வீட்டிலே வைச்சுக்கோ. 

உன்னால முடிஞ்ச பூஜை செய். உன் வீட்டைச் சுத்தி இருக்கற செடியிலேர்ந்து நாலு பூக்களைப் பறிச்சுப் போடு. பால் நைவேத்தியம் பண்ணு. பெரிசா பூஜை புனஸ்காரம்னு எதுவும் தேவையில்லை. அன்போடு நாம் செய்யறதை அவ ஏத்துப்பாள். அவ அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி. ‘அல்லலை நீக்கி வல்லமை காட்டுவாள், அம்புலி காட்டி அமுதினை ஊட்டுவாள்’. என் அஞ்ஞானம், நான் அவளை என்னோடு எடுத்துண்டு வந்தேன். ஒரு வாரம் அம்பாள் உன் வீட்டிலே இருக்கட்டும். ஊருக்குக் கிளம்பறதுக்கு முன்னாடி நானே வந்து வாங்கிக்கறேன்.’’

சித்தி பேசப் பேச ஜனனிக்கு அழுகை வந்தது. பாவம் சித்தி எத்தனை கொடுமைகளைச் சகித்திருக்கிறாள்... தன் கணவனிடம் அடிபட்டு மிதிபட்டு... கடைசியில் கணவனையும் இழந்து மகனிடம் அடைக்கலம் தேடி... இவள் தாய் தன் தங்கை பற்றி நிறையச் சொல்லி இருக்கிறாள். ‘‘கவலைப்படாதே சித்தி இந்த அம்பாள், என் வீடு தேடி வந்த தாய். என்னால முடிந்த பூஜை பண்றேன். ஆகமமா பூஜை பண்ணத் தெரியாது, ஆனா, அன்பா பூஜை பண்ணுவேன். மந்திரம் சரியா தெரியாது, ஆனா, சங்கீதம் தெரியும் நாதோபாசனைகூட பூஜைதான். 

தியாகப் பிரும்மம், சியாமா சாஸ்திரிகள், தீக்ஷிதர் போன்ற வாக்கேயக்காரர்கள் பாடின கீர்த்தனைகளைப் பாடுவேன்...’’ சித்தி ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். ‘‘எனக்கென்ன மனக்கவலை, என் தாய்க்கன்றோ தினம் தினம் என் கவலை’’  என்று மனம் உருகியது. சித்தி விடை பெற்றுச் சென்றவுடன் சமையல் அறையின்  ஷெல்ஃபில் கோலம் போட்டாள். குத்து விளக்கு ஏற்றி வைத்தாள். மனமுருகப் பாடினாள். ‘‘மாதா பராசக்தி வையமெல்லாம் நீ நிறைந்தாய்... மனம் நிறைவாக இருந்தது.’’ அன்று அலுவலகத்திலிருந்து வந்த அவள் கணவன் சோர்வுடன் இருந்தான். 

ஆபீஸில் ஏதோ பிரச்னையாம். இரவு முழுவதும் தூங்காமல் அவன் கவலைப்பட்டதில் காய்ச்சல் வந்து விட்டது. டாக்டர், மருந்து, மாத்திரை, ப்ளட் டெஸ்ட், ஸ்கேன் என்று ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமாக அலைந்து கொண்டிருந்தாள். அதே சமயம், வீடு தேடி வந்த அம்பாள் பூஜையையும் விடவில்லை. ‘‘தேவி நீ வீடு தேடி வந்த நேரம் நல்ல நேரம் என்று நினைத்தேனே ஏனிப்படி சோதிக்கிறாய்?’’ என்று மனத்துள் அழுதபடி பூஜைக் கடமையைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தாள்.

ஒரு வாரம் ஆகி விட்டது. சித்தி வந்து அம்பாளை வாங்கிக் கொண்டு போய் விடுவாள். தன்னால் முழுமையாகப் பூஜையில் ஈடுபட முடியவில்லையே  என்ற வருத்தம் ஜனனிக்கு இருந்தது. சித்தி வரவில்லை. சித்தி கொடுத்த போன் நம்பருக்குப் போன் செய்தாள். ‘‘ஹலோ மீனாம்பாளா?’’ ‘‘அ... அ... ஆமாம். அவ நம்பர்தான். ஆனா அவ போயிட்டாளே,” என்று வந்த பதில் ஜனனியைத் திடுக்கிட வைத்தது. தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் சித்தி சென்று விட்டாளா என்ன? ‘‘துபாய் போயிட்டாங்களா?’’

‘‘நீங்க யாரு? மீனாம்மா இறந்தே போயிட்டாங்களே!” உடலே ஆடியது ஜனனிக்கு. ‘‘என்ன சொல்றீங்க?’’ ‘‘ஆமாம்மா கல்யாணச் சாவு. நல்ல வேளை பிள்ளை பக்கத்திலேயே இருந்ததாலே எல்லா கர்மாக்களையும் பண்ணிட்டான். அவனும் ஊர் திரும்பிட்டான். எங்கோ துபாயிலே இருந்தவளுக்கு இந்த ஊர் மண்ணுலே விதி போட்டிருக்கு...’’ ஜனனி குழம்பினாள். தன்னிடம் வந்து தங்குவதற்காக அம்பாள் செய்த லீலையா இது? இது சரியாக வருமா? அம்பாள் வந்த வேளை... அம்பாள் வந்ததிலே இருந்து வீட்டிலே ஏக டென்ஷன், கணவருக்குக் காய்ச்சல், மருத்துவ மனை, சிகிச்சை... வேண்டாம் இந்த அம்பாள் வேண்டாம்... 

தன் முடிவு சரியா? தப்பா? என்பது பற்றி யாரிடம் கேட்பது? இந்த உலகம் பழி சொல்லுமே தவிர வழி சொல்லாது. அவள் தனிமையில் யோசித்து தனக்குள் அழுது புரண்டு புலம்பித் தவித்து கடைசியில் ஏதாவது ஒரு கோயிலில் அம்பாளை வைத்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்தாள். அன்று, கணவனுக்கு உடல் நிலை ஓரளவுக்கு சரியாகி அலுவலகம் சென்று விட்டான். இவள் அம்பாளுக்கு விசேஷ பூஜை செய்தாள். சர்க்கரைப் பொங்கல் செய்தாள். ஃபிரிட்ஜில் வைத்திருந்த  மல்லிகைப் பூச்சரத்தைப் போட்டாள். 

கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்தாள். ‘‘ஜனனி நின்னுவினா திக்கெவரம்மா’’ என்று வேண்டிக் கொண்டாள். பிறகு அந்தத் விக்ரகத்தை ஒரு பட்டுத் துணியால் கட்டினாள். தன் கைப்பையில் வைத்துக் கொண்டாள். இன்னொரு பையில் பழங்கள்,  சர்க்கரைப் பொங்கல் எல்லாம் எடுத்துக் கொண்டாள். இது ஒரு வழியனுப்பு விழா. ஊருக்கு அப்பால் சற்றே தள்ளி இருக்கும் அந்த அக்கிரஹாரத்தின் அந்த சிறிய கோயிலை அணுகினாள். இதுதான் சரியான இடம் யாருக்கும் தெரியாது. அர்ச்சகர் பார்த்தால் புரிந்து கொள்வார் அம்பாளுக்கு ஆராதனைக்கு ஒரு குறைவும் இருக்காது.

இவள் கோயிலை அணுகியபோது கோயில் பூட்டிக் கிடந்தது. அதற்குள் நடை சாத்தி விட்டார்களா என்ன? மணி ஒன்பது தானே ஆகிறது? வாசலில் இருந்த அந்தப் பொட்டிக் கடையும் பூட்டி இருந்தது. ஏன் என்னவாயிற்று? சுற்றிலும் யாருமில்லை. சற்றுத் தொலைவில் மரத்தடி நிழலில் ஒரு கிழவி அமர்ந்திருந்தாள். ‘‘ஏம்மா கோயில் எப்பத் திறக்கும்?’’ என்று அவளிடம் கேட்டாள். கிழவி அலுத்துக் கொண்டாள். “அதை ஏன் கேக்கறீங்க தாயி! இந்தத் தெருவுலே யாரோ இறந்துட்டாங்களாம். போனவரை எடுத்தப்புறம்தான் கோயிலை சுத்தப்படுத்தி  நடை திறந்து பூஜை செஞ்சு... எம்புட்டு நேரமாகுமோ!  

ரெண்டு நாளா பட்டினி தாயி. கோயில் திறந்திருந்தா பிரசாதம்னு ஏதாவது அய்யிரு தருவாரு. என் பையன்  சோறு போடாம என்னை வீட்டை விட்டுத்  துரத்தறப்போ எல்லாம் இந்த ஆத்தா தான் எனக்குச் சோறு போடுவா... இவளை நம்பி அம்மாந் தொலைவு நடந்து வந்தேன்... ஹும், இப்படி அடைச்சுக் கிடக்கறக் கதவைப் பாத்து எம்புட்டு நேரம் காத்திருக்கணுமோ? எல்லாம் என்  தலைவிதி, நான் வாங்கிட்டு வந்த வரம்... இல்லேனா பாசமா இருந்த மகளைப் பறிகொடுத்துட்டு இப்படி ஒரு வேளை சோத்துக்கு அலைவேனா?’’

திடீரென்று இவளுள் ஒரு அடைபட்ட கதவு திறந்த மாதிரி தோன்றியது. கிழவி புலம்பிக் கொண்டிருந்தாள். ‘‘ஆனா என் ஆத்தா என்னைக் கை விட மாட்டா...’’ ஜனனி சட்டென்று தன் பையைத் திறந்தாள். ‘‘இந்தாம்மா இதுலே சக்கரைப் பொங்கல், பழம் எல்லாம் இருக்கு எடுத்துக்கோ.’’ அந்தக் கிழவி மகிழ்ச்சியுடன் அந்தப் பையை வாங்கிக் கொண்டாள். ஆர்வத்துடன் பொட்டலம் பிரித்தாள். ‘‘நீங்க நல்லா இருக்கணும் தாயி.  உங்க புள்ளை குட்டிங்க நல்லா இருக்கணும். என் ஆத்தா இதோ இந்தக் கோயிலுக்குள்ள இருக்கறவளும் நீங்களும் ஒண்ணுதான் தாயி. 

என் பசியைப் போக்கின பராசக்தி.’’  கிழவி சர்க்கரைப் பொங்கல் வாயுடன் வாழ்த்தினாள். இவளுக்கு மெய் சிலிர்த்தது. போதும், இது போதும். இந்த வாழ்த்து போதும். தன்னை எந்தத் தீமையும் அணுகாது. ஒரு ஏழையின் பசி தீர்ப்பதும் ஒரு பூஜைதான். காசியில் ஆதி சங்கரருக்கு ஒரு புலையன் ஞானோபதேசம் செய்யவில்லையா? புத்தனுக்கு போதி மரத்தடியில் ஞானம் கிடைக்க வில்லையா? இவளைப் பொறுத்தவரை காசி, போதி மரம் எல்லாம் இந்தக் கிழவிதான். தன் வினைப் பயனைத்தான் அனுபவிக்கிறோம் என்ற ஞானம் கிடைக்கப் பெற்ற தருணம்,  இது கருணையின் தருணம்.

அந்த அம்பாள் இவள் பூஜையை ஏற்றுக் கொண்டு விட்டாள். தன்னை ஏற்றுக் கொண்ட தாயை இவளும் ஏற்க வேண்டாமா? இவள் எந்தவிதச் சலனமும் இன்றி வீடு திரும்பிய போது கையில் ப்ரமோஷன் ஆர்டருடன் இவள் கணவன் காத்திருந்தான்! ‘‘எங்கே போயிட்டே?’’ என்று உற்சாகமாகக் கேட்டான். ‘‘இல்லை, இதோ வந்துட்டேனே,’’ என்று இவளும் உற்சாகமாக பதில் சொன்னாள். மல்லிகை மணத்தின் வாசனையுடன் இவள் அம்பாளுடன் வீட்டில் அடி எடுத்து வைக்கிறாள். மனம் பாடுகிறது. 

Comments

Popular posts from this blog

வேண்டாமே விமர்சனம்

கை தட்டு, சித்தி உண்டாகும்

கிழங்கு விற்ற சரஸ்வதி