ராமானுஜருக்கு சரஸ்வதி வழங்கிய விருது


ராமானுஜர் ஸ்ரீபாஷ்யம் என்ற கிரந்தத்தை விசிஷ்டாத்வைத கொள்கையின்படி எழுதுவதற்காக காஷ்மீரம் சென்றார். உடன் அவரது அந்யந்த சீடனான கூரத்தாழ்வான். அங்கே, சரஸ்வதி பண்டாரம் என்ற அமைப்பில் இருக்கும் ‘விருத்தி கிரந்தத்தை’ ஆதாரமாகக் கொண்டு ஸ்ரீபாஷ்யம் எழுத அவர் முற்பட்டார்.  அந்த கிரந்தத்தைப் பெற்ற அவர் அதனை வெகு குறைந்த காலமே தாம் வைத்திருக்க முடியும் என்ற நடைமுறை உண்மை காரணமாக, ஆழ்ந்த சிரத்தையுடன் பணியில் இறங்கினார். ஆனால், அவரது முயற்சி கண்டு பொறாமை கொண்ட அப்பகுதி சமயவாதிகள் சிலர் அந்த கிரந்தத்தை குறிப்பிக்க சில நாட்கள் மூட வைத்துக்கொள்ள முடியாதபடி அதனை அமைப்பினரால் திரும்பப் பெற வைத்துவிட்டார்கள். 

இதனால் பெரிதும் வருத்தமடைந்த ராமானுஜர், கூரத்தாழ்வானிடம் தமது கவலையைத் தெரிவித்தார். ஆனால், உத்தம சீடனான ஆழ்வானோ அந்த கிரந்தத்தை தாம் ஒரே நாளில் இரவு முழுவதும் கண் விழித்து முற்றிலுமாகப் படித்து விட்டதாகவும், அதனைத் தன்னால் அப்போதே அவருக்குத் தெரிவிக்க முடியும் என்றும், அல்லது ஆசார்யன் விருப்பப்பட்டால் இரண்டாற்றுக்கு நடுவில் வந்தும் சொல்ல முடியும் என்றும் தாழ்மையாக பதிலளித்தார். (இரண்டாற்றுக்கு நடுவில் என்பது காவிரி கொள்ளிடம் நதிகளுக்கிடையே அமைந்துள்ள ஸ்ரீரங்கம்). காஷ்மீரத்திலிருந்து ஸ்ரீரங்கம் வரும்வரை தன்னால் அந்த கிரந்தம் முழுவதையும் நினைவில் கொள்ள முடியும் என்ற நினைவாற்றல் நம்பிக்கை, ஆழ்வானுக்கு! ராமானுஜருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. உடனே ஆழ்வானின் உதவியுடன் ஸ்ரீபாஷ்யத்தை எழுதி முடித்தார். 

இதையறிந்த சரஸ்வதி மாதா, ராமானுஜரை மிகவும் பாராட்டி அவருக்கு ‘ஸ்ரீபாஷ்யகாரர்’ என்று திருநாமமிட்டு தனது ஆராதனைத் தெய்வமான சிறிய அளவிலான லஷ்மி ஹயக்ரிவர் விக்ரஹ மூர்த்தியை அவருக்குப் பரிசாகவும் அளித்தாராம். அந்த ஹயக்ரிவ மூர்த்திதான் வழிவழியாகப் பல பெரியவர்களால் ஆராதிக்கப்பட்டு ஸ்வாமி தேசிகனை அடைந்து பின்னர் மைசூர் பரகால மடத்தைச் சேர்ந்ததாகக் கூறுவர். அந்த மூர்த்தியை மைசூர் பரகால மடத்தில் இன்றும் தரிசிக்கலாம். மேலும் தற்போது பீடாதிபதியாக விளங்கி வரும் ஜீயர் ஸ்வாமிகளின் திக்விஜயத்தின்போது அவருடன் அந்த மூர்த்தி எழுந்தருள்வது வழக்கம். இதில் குறிப்பாக கவனிக்க வேண்டிய விஷயம், ஆழ்வானின் ஏகாக்ரசித்தம். ஒரு தரம் படித்து விட்டாலே அப்படியே நினைவில் இருத்திக்கொள்ளும் அபார சக்தி. அதேபோல அஹோபில மடத்தில் ஆராதனை மூர்த்தியாக விளங்கும் டோலைக் கண்ணனும் ராமானுஜரால் ஆராதிக்கப்பட்டவர் என்ற தகவலும் குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

வேண்டாமே விமர்சனம்

கை தட்டு, சித்தி உண்டாகும்

கிழங்கு விற்ற சரஸ்வதி