எல்லாம் குழந்தை வந்த வேளை


தெற்குப்புற ஜன்னலண்டை வந்து எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் சங்கரி. “என்னம்மா,  கண்ணனைத்தானே எதிர்பார்க்கறே! அவன் என்னிக்குத்தான் பொழுதோட வீட்டுக்கு வந்திருக்கான்? ஆபீஸ், ஆபீஸ், வேலை, வேலை... என்னதான் வெட்டி முறிப்பானோ?” என்று அலுத்துக்கொண்டார் ரிடையராகி வீட்டில் இருக்கும் சங்கரியின் மாமனார். “ஹும்; கல்யாணத்துக்கு முன்னாலேதான் ஆபீஸைக் கட்டிண்டு அழுதான், அப்புறமாவது குடும்பம் பொறுப்புன்னு ஏற்பட்டா காலாகாலத்திலே வீட்டுக்கு வருவான்னு நெனைச்சேன்; 

அட, ஒரு குழந்தை பிறந்து மூணு மாசமாறது, அந்தக் குழந்தையைப் பார்க்கணும், கொஞ்சணும் விளையாடணும்னு நினைக்கறானா? தோணலியே அவனுக்கு.” சங்கரிக்கு மட்டுமல்ல தனக்கே ஏற்பட்டிருந்த ஆதங்கத்தை வார்த்தை விசிறியால் ஆற வைக்க முயற்சித்தார் மாமனார். “அதோ அவர் வந்துட்டார்...’’ என்று குதூகலித்த சங்கரி, “ப்ளீஸ், ப்ளீஸ்... வந்ததும் வராததும் அவர்கிட்ட ஒண்ணும் கேட்டுடாதீங்க. அவர், சுள்ளுன்னு விழுவார்” என்று மாமனாரிடம் கெஞ்சினாள். “அவனை எனக்குத் தெரியாதா? 

முன்கோபத்திலே முதல் பிரைஸ் அடிக்கறவனாச்சே” என்ற அவர் சங்கரியின் தோளில் சாய்ந்து தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை வாங்கித் தன் தோளில் சாய்த்துக் கொண்டார். லேசான சிணுங்கலுடன் சற்றே நெளிந்த குழந்தை, இந்தத் தோளும் தனக்குப் பரிச்சி யமானதுதான் என்பதை உணர்ந்து, தன் தூக்கத்தைத் தொடர்ந்தது. சங்கரி உள்ளே போய், மாமியாரிடம், “அவர் வந்துட்டார்” என்றாள். அவள் குரலிலிருந்து சந்தோஷத்தைக் கேட்ட பிறகுதான் அம்மாவுக்கும் நிம்மதி ஏற்பட்டது. வழிநடையில் செருப்பை வீசிவிட்டு உள்ளே வந்தான் கண்ணன். 

“உஸ்... அப்பாடா” என்று அலுத்துக்கொண்டபடி நாற்காலியில் சாய்ந்தான். அப்பா தன் இருக்கையை விட்டு எழுந்து மின்விசிறியை அதிகமாகச் சுழல வைத்தார்.
சமையலறையில் அப்பாவுக்கும் பிள்ளைக்குமாக சாப்பாட்டுத் தட்டு வைக்கப்பட்டது. “இந்த பிரைவேட் கம்பெனிக்காரங்களே சுத்த மோசம் கசக்கிப் பிழிஞ்சுடுவாங்க, சே!” என்று பொதுப்படையாகக் கூறிய அப்பா, ஓரக்கண்ணால் தன் பையனை பார்த்தார். இரண்டு கவளம் சாதம் உள்ளே இறங்கிய பிறகு கொஞ்சம் தெம்பு வந்தது கண்ணனுக்கு. “இன்னிக்கு சாயந்திரம் மானேஜர் அவரோட ரூமுக்குக் கூப்பிட்டார்...” என்று ஆரம்பித்தான்.

அவன் இயல்பாகப் பேச ஆரம்பித்தது கண்டதும் சங்கரியும் அம்மாவும் அப்படியே தரையில் உட்கார்ந்து விட்டார்கள். பொதுவாகவே அலுவலகத் திலிருந்து வரும் அவன் கொஞ்சம் கடுகடுப்பாகத்தான் இருப்பான். வேலை பளு ஒரு பக்கம் என்பதோடு, பஸ் பயணமும் அவனுடைய கூடுதல்  அலுப்புக்குக் காரணம். அதனாலேயே அவனை யாரும் வந்ததும் வராததுமாக எதுவும் கேட்கமாட்டார்கள். அவனாக சொன்னால் கேட்டுக்கொள் வார்கள். ஆனால், அவன் வயிற்றுக்குள் ருசியாகக் கொஞ்சம் உணவு போய்விட்டால், அவன் இயல்புக்கு வந்துவிடுவான். 

‘‘அவர் வேற பிராஞ்சுக்கு மாற்றலாகிப் போகிறாராம். அதனால இங்கே காலியாகிற அவர் பதவிக்கு என்னைச் சிபாரிசு செய்திருக்காராம்...” “அடி சக்கை! கங்கிராஜுலேஷன்ஸ்,” என்றார் அப்பா உற்சாகத் துள்ளலுடன். “என்ன, என்ன சொல்றான் இவன்?” அம்மாவுக்குச் சரியாகப் புரியவில்லை. “இவருக்குப் பிரமோஷன் கிடைக்கப் போறதும்மா. மானேஜராகப் போறார்!” சந்தோஷத்தால் உரக்கவே சொன்னாள் சங்கரி. “அட, அப்படியா, தேவலையே” என்றாள் அம்மா. அப்போது படுக்கையறையில் தூளியில் தூங்கிக்கொண்டிருந்த உமா அழுதாள். 

“அட அதுக்குக்கூடச் கேட்டுடுத்தே. எல்லாம் என் பேத்தி வந்த வேளை. அவளோட ராசிதான்” என்றார் அப்பா. அதைக்கேட்டு, அழும் குழந்தையைக்கூடப் போய்க் கவனிக்கத் தோன்றாமல் மகிழ்ச்சி பொங்கிப் பெருகியது சங்கரியின் மனத்தில். “இல்லையா பின்னே?”அம்மா அப்பாவை ஆமோதித்தாள். ‘‘பெண் குழந்தை பிறந்தா ஐஸ்வர்யத்தையும் கூடவே அழைச்சுண்டு வருவான்னு சொல்றது தப்பாயிடுமா என்ன?” “என்ன பெரிய ராசியோட வந்துட்டா?” பொசுக்கென்று கோபப்பட்டான் கண்ணன். மூவரும் அதிர்ந்து போனார்கள். 

அவன் தொடர்ந்தான்: ‘‘நான் உழைச்சேன், மாடா உழைச்சேன்; அதுக்கு எனக்குப் பலன் கெடைச்சிருக்கு. அவ்வளவுதான். இதைப்போய் குழந்தையோட ராசின்னு சொல்லி என்  முக்கியத்துவத்தைக் குறைக்காதீங்க.” அப்பா சொன்னது, தனது இத்தனை நாள் கடும் உழைப்பை அவர் அலட்சியம் செய்வதுபோலப் பட்டது அவனுக்கு. “இல்லேடா, ஒரு பேச்சுக்கு...” என்று குற்ற உணர்வுடன் இழுத்தார் அப்பா. “பேச்சுக்கும் வேண்டாம், எழுத்துக்கும் வேண்டாம். இன்னிக்கு மானேஜர் என்ன சொன்னார் தெரியுமா? ‘ஒரு நிமிஷத்தின் அறுபது செகண்டையும் வீணாக்காமல் உழைக்கிறவன் நீ. 

உன்னைத் தவிர வேறு யாரையும் நான் சிபாரிசு பண்ண முடியும்?’னார். ‘உனக்குக் குழந்தை பிறந்திருக்கே, அதுக்காக இந்தா மானேஜர் பதவி‘ன்னு ஒண்ணும் சொல்லலே” என்றான் படபடப்புக் குறையாமல். மனம் வாடி சோகமானாள் சங்கரி. இரவில் சங்கரி விசும்பும் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டான் கண்ணன். “ஏய், என்ன இது?” விம்மி விம்மி பதில் சொன்னாள் சங்கரி: “அப்பா சொன்னது அப்படி என்ன குற்றமாகப் போயிடுத்தாம்? என்னமோ உங்களுக்கு உமாவைக் கண்டாலே பிடிக்கலே. வீணா கரிச்சுக் கொட்டறீங்க. 

ஒருவேளை அது பையனாகப் பிறந்திருந்தா தலையிலே தூக்கி வைச்சு கொண்டாடு வீங்க போல...” இப்போது கண்ணனுக்குக் கோபம் இன்னும் அதிகமானது. “இன்னொரு எழுத்து நீ பேசினாயானா நான் வெளியே போய்ப் படுத்துக்கொண்டு விடுவேன். நாளையிலேந்து வீட்டுக்கே வரமாட்டேன். ஆபீஸ்லேயே தூங்கி, சாப்பிட்டுட்டு எல்லாம் பண்ணிப்பேன்...” என்று சிடுசிடுத்தான். வழிக்கு அவன் வரமாட்டான் என்பதைத் தன் ஒன்றரை வருட அனுபவதில் தெரிந்துகொண்டிருந்தாள் சங்கரி. உடனே அவன் கோபத்தைக் குறைக்க எண்ணி, “எல்லாமா? 

அது எப்படி?” என்று கேலியாகக் கேட்டாள். அவள் சொன்னதன் உள்ளர்த்தத்தைப் புரிந்துகொண்ட கண்ணன். கோபத்தைக் குறைத்தவனாய், “உதை கொடு ராஸ்கல்” என்றபடி அவளை  அணைத்துக் கொண்டான். “சொல்வதைக் கொஞ்சம் தன்மையாகச் சொன்னால்தான் என்னவாம்?” சந்தடிச் சாக்கில் சொல்லி வைத்தாள் அவள். “என் சுபாவம் அப்படி... என்னாலே மாத்திக்க முடியலே, விடு” என்ற கண்ணன் அவளை இன்னும் இறுக அணைத்துக் கொண்டான். புதிதாக மானேஜர் பதவி கிடைத்தவுடன் அதற்குத் தேவையான சௌகரியங்கள் பெருகின. 

கம்பெனியே ரெஃப்ரெஜிரேட்டர், டைனிங் டேபிள்,  ஸ்கூட்டர், டெலிபோன், மொபைல் போன்ற வசதிகளையும் செய்து தந்தது. “எல்லாம் என் பேத்தி வந்த வேளை. என் செல்வம், என் ராஜாத்தி வந்த வேளை” என்று குழந்தையை எடுத்து முத்தமிட்டுக் கொஞ்சினார் அப்பா. கூடவே கண்ணன் அந்தப் பக்கமாக  வந்துவிடப் போகிறானே என்ற பயமும் இருந்தது. உமாவோ பொக்க வாய் திறந்து சிரித்தாள். ‘‘போ, தாத்தா. நீ பெரிசா கொஞ்ச வந்துட்டே! அப்பாவைக் கொஞ்சச் சொல்லு” என்று கூறுவது போல் இருந்தது அந்தச் சிரிப்பு. ஆனால், அவனுக்குத்தான் அதற்கு அவகாசமே இல்லை.

புதிய பதவி கண்ணனுடைய நேரத்தை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டது. அவனுக்கே ஏதோ குற்ற உணர்வு உறுத்தியது போலும்! “இன்னும்  ஒரே வாரம்தான் அப்புறம் பொறுப்புகளைப் பிரிச்சுக் கொடுத்திட்டு மேஸ்திரி வேலை பார்க்க வேண்டியதுதான். இனிமே உமா, நீங்க எல் லாரும்தான் என் உலகம்...’’ என்றான். “அதெப்படி? உங்களுக்குக் கீழே வேலை பார்க்கற இருபது பேர்ல ஒருத்தர் தப்பு பண்ணினாலும் நீங்கதானே அதுக்குப் பொறுப்பேற்கணும்? அத னால் உங்களுக்குப் பொறுப்பு கூடுகிறதே தவிர, குறைய ஒண்ணுமில்லை,” அவனுக்கு திருஷ்டி பட்டுவிடக் கூடாதே என்ற தவிப்பில் பதில் சொன்னாள் சங்கரி.

ஆனால், நாளாக ஆக, தான் சொன்னபடி, மேஸ்திரி வேலைக்குத் தன்னைத் தயார் செய்துகொண்டு, அப்படியே நடந்தும்கொண்டான். வீட்டிற்கு வரும் நேரம் இரவிலிருந்து பின்மாலைப் பொழுதாக ஆயிற்று. வழக்கமாகக் கேட்க வேண்டிய ஸ்கூட்டர் சத்தம் கேட்காமல், ஏதோ வேன் வந்து நிற்கும் சத்தம் கேட்கவே அனைவரும் திடுக்கிட்டு வாசலைப் பார்த்தார்கள். ஆம்புலன்ஸ். பின் கதவுகளைத் திறந்து ஸ்ட்ரெட்சரை வெளியே எடுத்தார்கள். அதில் கண்ணன் படுத்திருந்தான். அப்பாவும் அம்மாவும் பிரமை பிடித்தாற்போல இருக்க, சங்கரியின் கண்கள் குபுக்கென்று நீரைப் பெருக்கின. 

அரற்றாக்கூடத் திராணியில்லை அவளுக்கு. மயக்கம் வரும்போல இருந்தது. குழந்தை உமா மட்டும் அப்பாவுக்கு ஏதோ ஆபத்து என்பதை உணர்ந்தாற்போலக் கத்திக் கொண்டிருந்தாள். காலையிலேயே விபத்து ஏற்பட்டுவிட்டதாம். ஓர் ஆட்டோ ரிக்ஷாவின் எதிர்பாராத வலது திருப்பம், அவனது கால் எலும்பு முறிவில் கொண்டுவிட்டதாம். உடனே அருகே இருந்தவர்கள் கண்ணனை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு, அவன் பையிலிருந்த அலுவலக விலாசத்துக்குத் தகவல் கொடுத்தார்களாம். அதிகம் சேதமுறாத ஸ்கூட்டரும், அவன் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாம்.

“இந்த ஆட்டோ ரிக்ஷாக்காரங்களே சுத்த மோசம்...’’ அப்பா பொதுவாகச் சொன்னார், கரகரத்த குரல் வேதனையுடன். “இது என்னடி சோதனை?” அம்மா புடவை முந்தானை கண்ணீரில் நனைந்தது. ‘‘பகவானே சந்தோஷத்தைக் கொடுத்து உடனேயே வருத்தத்தையும் கொடுக்கிறாயே அப்பா...” என்று முறையிட்டுக் கொண்டாள். படுக்கையில் படுத்திருந்த அவன் நெஞ்சை நீவிக் கொண்டிருந்தாள் சங்கரி. அவள் கண்ணீர் பொலபொலவென்று அவன் மார்பில் உதிர்ந்தது. “அழாதே சங்கரி. எனக்கு சீக்கிரம் குணமாயிடுமாம், டாக்டர் சொன்னார்...” கண்ணன் ஆறுதல் சொன்னான். 

ஆனால், அவளால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லைதான். சிறிது நேர மௌனத்துக்குப் பிறகு கண்ணன் மெதுவாகக் கேட்டான். “என்ன இது? எனக்கு விபத்து ஏற்பட்டதற்குக் காரணம் நம்ம குழந்தை உமாவின் ராசிதான்னு யாருமே சொல்லக் காணோமே, ஏன்?” திடுக்கிட்டாள் சங்கரி. “அன்னிக்கு என் பிரமோஷனுக்குக் காரணம் உமாவின் ராசிதான்னு அப்பா சொன்னபோது அதுக்கு சம்மதமா நானும் தலையாட்டியிருந்தேன்னு வெச்சுக்கோ, இன்னிக்கு நானே என்னை அறியாமல் இந்த விபத்துக்கும் அவள் ராசிதான் காரணம்னு கற்பனை பண்ணிக்கொண்டு விட்டிருப்பேன்.  

பாவம், பச்சைக் குழந்தை அது. அதுக்கு இனிமே நாமதான், சூது, வாது, பொய், புரட்டு, எல்லாம் சொல்லிக் கொடுக்கணும். அதுக்குப் பிறவியி லேயே அதெல்லாம் தெரியாது. நல்லதோ, கெட்டதோ, நடக்கறது நடந்தே தீரும். அதுக்கு இந்தக் குழந்தையை ஏன் அனாவசியமாகப் பாராட்டணும்  அல்லது பழியாக்கணும்..?” சங்கரி அப்படியே நெகிழ்ந்து போனாள். தன் குழந்தை மீது அவனுக்கு அன்பில்லை என்று நினைத்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்தாள். 

“என்னை மன்னிச்சுடுங்க. நீங்க பெரியவர். உங்களை நாங்கதான் சரியாகப் புரிஞ்சுக்கலே. நீங்க பலாப்பழம் மாதிரி. மேலேதான் முள், உள்ளே  இதயம் ரொம்ப ஸ்வீட்...” என்று சொன்னபடி அவன் மார்பில், அவனுக்கு வலிக்காமல் மெல்ல சாய்ந்தாள். திடீரென்று ‘ஆவ்’ என்று கத்தினாள் குழந்தை. ‘தேங்க்ஸ் அப்பா’ என்று அது சொன்னதுபோலிருந்தது.

Comments

Popular posts from this blog

வேண்டாமே விமர்சனம்

கை தட்டு, சித்தி உண்டாகும்

கிழங்கு விற்ற சரஸ்வதி