ஏன் இப்படி, என்ன காரணம்?

ஜோதிடர் தாண்டவனுக்கு ஏகப்பட்ட வருத்தம். தாமும் எவ்வளவோ துல்லியமாகக் கணித்துதான் ஜோதிடம் சொல்கிறோம்; ஆனாலும் தனக்கு மட்டும் ஏன் அதிக எண்ணிக்கையில் ஜாதகர்கள் வருவதில்லை என்று அவருக்குப் புரியவில்லை. இத்தனைக்கும் மிகுந்த ஈடுபாட்டுடனும், அதிக ஆர்வத்துடனும்தான் அவர் ஜோதிடம் கணித்துச் சொல்கிறார். கேட்கிறவர்கள் தங்களுடைய பழைய கால சம்பவங்களை அவர் விவரித்துச் சொல்லும்போது மிகுந்த அதிசயத்துடன் வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருப்பார்கள். ‘அதெப்படி இத்தனை தெளிவாக, கூட இருந்துப் பார்த்ததுபோலவே சொல்கிறீர்கள்?’ என்று ஆச்சரியத்துடன் வினவியிருக்கிறார்கள்.
‘எல்லாம் உங்கள் ஜாதகம் சொல்றதுதான். இதுதான் அழகான கண்ணாடிபோல உங்க வாழ்க்கைச் சம்பவங்களை அப்படியே காட்டுதே. அதை நான் சரியாகப் படிச்சுச் சொல்றேன், அவ்ளோதான்,’ என்று அடக்கமாக பதில் சொல்வார். இப்படி அடக்கமாகவும், பணிவாகவும் தான் இந்தத் தொழிலைப் பார்ப்பது சரியில்லையோ! பந்தா காட்ட வேண்டுமோ! ஜாதகத்தைப் பார்த்தவுடன் தன் மனசுக்குத் தெளிவாகப் பட்டதை உடனே சொல்லக்கூடாதோ! நீட்டி முழக்கி, அதிக நேரம் எடுத்துக்கொண்டு, எதிரில் உட்கார்ந்திருக்கும் ஜாதகரின் கண்களை, மனோவசியப்படுத்துவதுபோல உற்றுப் பார்த்துக்கொண்டே சொல்ல வேண்டுமோ! ஜாதகம் பார்க்கத் தான் வசூலிக்கும் கட்டணம் மிகக் குறைவோ, இதுவே மதிப்பைக் குறைக்கிறதோ!
ஜாதகம் பார்க்கத் தன்னை நாடி வருபவர்களை தன் எதிரே நாற்காலிகளில் அமரச் சொல்லி அவர்களிடமிருந்து ஜாதகத்தை வாங்கி, கண்களை அதன் மீது ஓட்டுவார். அவர் தலை நிமிரும்போது பெரும்பாலும் அவர் முகம் சலனமற்றிருக்கும். ‘‘உங்களுக்கு இந்தக் கஷ்டமோ அல்லது இதைத் தொடர்ந்து வேறு துன்பங்களோ தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கும். உங்க ஜாதகம் சொல்கிறது. பரிகாரம் செய்தாலும் அந்தக் கஷ்டங்களின் வீர்யம் ஓரளவு குறைவதாகவோ அல்லது அவற்றை சமாளிக்கும் மன உறுதி அமைவதாகவோதான் இருக்கும். அதனால் இன்னும் கொஞ்ச காலத்துக்குப் பொறுமையாக இருங்கள்,’’ என்று அவர் தன் கணிப்பைச் சொல்வார்.
வந்தவர்கள் முகத்தில் ஏமாற்றத்தின் சாயல் இருட்டடிக்கும். தம் துயரங்களைத் துடைக்கக்கூடிய, அந்தத் துயரச் சுவடே இல்லாதபடி போக்கும் கடவுளாகவே அவரைக் கருதி வந்தவர்களுக்கு அவருடைய இந்தக் கூற்று மன அழுத்தத்தை அதிகரிக்கும். சற்றே பெருமூச்சு விட்டவாறு எழுந்திருக்கும் அவர்கள் அவருக்குக் கொடுக்கவேண்டிய சன்மானத்தை வேண்டா வெறுப்புடன் கொடுத்துவிட்டு நகர்வார்கள். தாண்டவனின் மனைவி தலையில் அடித்துக்கொள்வாள். ‘‘பிழைக்கத் தெரியாத ஜடமாக இருக்கிறீர்களே! இப்படியா பளிச்சென்று சொல்வது?
அவர்களுடைய கஷ்டங்களெல்லாம் நாளைக்கே சரியாகிவிடும், இந்தக் கோயிலுக்குப் போய் இன்ன பரிகாரம் செய்தால் போதும் என்றெல்லாம் சொல்லத் தெரியாமல் இதென்ன பட்டவர்த்தனமாக ஜோதிட வாக்கு! ‘ஜாதகத்தில் இருப்பதைத்தானே நான் சொல்ல முடியும்! வந்தவர்கள் மனம் மகிழ வேண்டும் என்பதற்காக இல்லாததை, நடக்க இயலாததை எப்படிச் சொல்வது?’ என்று திருப்பிக் கேட்பார். மனைவி பதில் எதுவும் சொல்லாமல் உள்பக்கமாகத் திரும்பிக் கொள்வார். ஒரு நாளைக்கு சராசரியாக மாலைவரை இரண்டு அல்லது மூன்று பேர் ஜாதகம் பார்க்க வந்தால் அதிகம். ஆனால், அப்படி வருபவர்களுக்கும் விபரீதமான ஜாதகங்களாக இருக்கின்றனவே!
தாண்டவன் தன்னைப்போலவே ஜோதிடம் பார்க்கும் பிற பல ஜோதிடர்கைளப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார். அவர்களில் குறிப்பிடத் தகுந்தவர் சபாபதி. அவருடைய வீட்டு வாசலில் வரிசை கட்டி நிற்கும் கார்களே அவருடைய பெருமையைப் பறைசாற்றும். தனியே ஒரு ஃப்ளாட்டை விலைக்கு வாங்கி அதைத் தன் ஜோதிட அலுவலகமாக மாற்றியிருக்கும் அவருடைய வசதியை தாண்டவன் ஆச்சரியமாகப் பார்ப்பார். அவரும் தன்னைப் போலவே கச்சிதமாக ஜோதிடம் சொல்லக்கூடியவர் என்பதையும் கேள்விப்பட்டிருக்கிறார். ஆனாலும், அவருக்கு இருக்கும் செல்வாக்கும், அவரிடம் ஜோதிடம் பார்க்க வருபவர்களின் எண்ணிக்கையும் வெகு அதிகமாக இருப்பதன் ரகசியம்தான் என்ன?
தாண்டவனின் மனைவி மட்டுமல்ல, அவர்மீது அக்கறை கொண்ட அவருடைய நண்பர்களும் அவருக்குத் தற்கால ஜோதிடத் தொழில் நுணுக்கத்தைப் பயன்படுத்தத் தெரியவில்லை என்று குற்றம்தான் சாட்டினார்கள். அவர் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்கள். அதாவது, எதிர்மறை விஷயங்களை, நேர்மறையாகச் சொல்லவேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். உதாரணத்துக்கு ஒருவரை ‘பிடிவாதக்காரன்’ என்று சொல்வதை விட ‘தன்னம்பிக்கை மிகுந்தவர்’ என்று சொல்லி சந்தோஷப்படுத்தவேண்டும் என்று சில நெளிவு சுளிவுகளைக் கற்றுத் தந்தார்கள்.
‘ஆனால், என்னதான் நான் வார்த்தைகளை மாற்றிப் போட்டு ஜாலம் செய்தாலும், அவர்களுக்கு அவர்கள் ஜாதகம் சொல்வதுபோலதானே நடக்கும்?’ அன்று நல்லபடியாக நடக்கும் என்பதுபோல சொன்னீர்களே, அப்படி நடக்கவேயில்லையே,’ என்று யாராவது வந்து என்னைக் குற்றம் சாட்டினால் என்னால் என்ன பதில் சொல்ல முடியும்?’ என்று கேட்டார் தாண்டவன். ‘இதெல்லாம் ஒரு விஷயமா? ‘நான் சொன்ன பரிகாரத்தை உள்ளார்ந்த ஈடுபாட்டோடு, துயரம் களையப்பட வேண்டும் என்ற தீர்மானத்தோடு மேற்கொண்டிருந்தீர்களானால் இப்போது நீங்கள் நிம்மதியாக இருந்திருப்பீர்கள்; என்னிடம் வந்து இப்படிக் கேட்கவேண்டிய அவசியமும் இருக்காது,’ என்று சொல்ல வேண்டியதுதானே!’ என்று அவர்கள் அவருக்கு மேலும் சொல்லிக் கொடுத்தார்கள்.
‘ஆனால், அவர்களுடைய கஷ்டம் எந்தப் பரிகாரம் செய்தாலும் தீராது, தொடரத்தான் செய்யும் என்பதுதானே அவர்களுடைய ஜாதகம் சொல்லும் உண்மை? அதற்கு மாறாக எப்படி நடக்க முடியும்?’ என்று தன் நிலையிலிருந்து இறங்காமல் கேட்டார் தாண்டவன். ‘இதெல்லாம் ஒரு பேச்சா? ஒன்று மட்டும் தெரிந்துகொள்ளுங்கள், ஜாதகம் பார்க்க வருபவர்களுக்கு நீங்கள் சொன்னபடி நல்ல விஷயம் நடக்கவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள், அவர்கள் மறுபடி உங்களை நாடி வரமாட்டார்கள், உங்களிடம் விளக்கமும் கேட்க மாட்டார்கள். மாறாக, வேறொரு ஜோதிடரைத் தேடிக்கொண்டு போய்விடுவார்கள்.
அதேசமயம் நீங்கள் சொன்ன நல்ல விஷயங்கள் அவர்கள் வாழ்வில் நடக்குமானால், அதை அவர்கள் பலரிடமும் சொல்லி, அவர்களையும் உங்களிடம் அனுப்பி ஜாதகம் பார்க்கச் செய்வார்கள்… சொன்னது நிறைவேறாதவர்கள் அடுத்தடுத்து ஜோதிடர்களைத் தேடி செல்வதால் ஜோதிடர்களின் எண்ணிக்கை அதிகமாகும்; நிறைவேறியவர்கள் சொல்வதால் உங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும்!’
தாண்டவன் இந்த பதில்களால் சமாதானமடையவில்லை. இந்தக் காரணங்களுக்கும் மேலாக ஏதோ ஒன்று இருக்கிறது. அது என்ன என்றுதான் எனக்குப் புரியவில்லை’ என்று தனக்குள்ளேயே கேட்டு விடை தேட முயற்சித்தார்.
ஜோதிடர்கள் சங்கம் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. அதில் தானும் ஓர் உறுப்பினர் என்பதால், அந்த மாநாட்டில் கலந்துகொள்ள முடிவு செய்தார் தாண்டவன். தன்னோடு இதே தொழிலில் ஈடுபட்டிருக்கும் பல ஜோதிடர்கள் பல மாநிலங்களிலிருந்தும் அந்த மாநாட்டுக்கு வருவார்கள் என்பது தெரிந்திருந்ததால், அவர்களிடமிருந்து தன்னுடைய சந்தேகத்துக்கு ஏதேனும் தீர்வு கிடைக்குமா என்று அறிந்துகொள்ளும் நோக்கமும் அவ்வாறு கலந்துகொள்ளும் முடிவில் அடங்கியிருந்தது. மாநாட்டில் கருத்தரங்கம், ஆராய்ச்சிப் படிவங்கள் படித்தல், விவாதம், வழக்கம்போல நிறைவாக அரசாங்கம் ஜோதிடர்களுக்கு என்னென்ன சலுகைகள், ஆதரவுகள் தரவேண்டும் என்ற கோரிக்கைகள்…
அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த பல ஜோதிடர்களில் வயது முதிர்ந்த ஒருவர் தாண்டவனைப் பார்த்தார். அவர் முகத்தில் ஓடிய குழப்ப ரேகைகளைப் படித்தார். ‘‘உடம்பு சரியில்லையா?’’ என்று நேரடியாகவே விசாரித்தார். தனக்கு ஏற்கெனவே அறிமுகமாகியிருந்த அவர் தன்னை விசாரித்ததில் மகிழ்ந்த தாண்டவன், ‘‘அதெல்லாம் ஒன்றுமில்லை; ஏதோ சோர்வு…’’ என்றார். ‘‘இது உடல் சோர்வால் ஏற்பட்டதல்ல; மனச் சோர்வால் ஏற்பட்டதாகவே தோன்றுகிறது.’’ ‘‘ஒருவகையில் அப்படித்தான் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.’’ ‘‘என்ன விவரம்? சொல்லுங்கள்.’’ ‘‘எனக்கு வரும் ஜாதகங்களில் உள்ள விவரங்களை நான் சொல்கிறேன். ஆனால், அதெல்லாம் எதிர்மறையாகவே இருக்கின்றன.
அதை மாற்றிச் சொல்ல எனக்குப் பிடிக்கவில்லை. கசப்பு மருந்துமேல் சாக்லெட் தடவிச் சொல்லவும் தெரியவில்லை. அதைவிட உள்ளதை உள்ளபடி சொல்லாமல், வரும் ஜாதகரை மகிழ்விப்பதற்காகத் திரித்துச் சொல்ல எனக்கு உடன்பாடில்லை…’’ ‘‘உங்களுடைய ராசி அப்படி!’’ என்று சொல்லிச் சிரித்தார் முதியவர். ‘‘என்ன சொல்கிறீர்கள்?’’ என்று குழப்பமாகக் கேட்டார் தாண்டவன். ‘‘உங்களிடம் ஜோதிடம் கேட்க வருபவர்களின் உண்மை நிலையைச் சொல்லுகிறீர்கள். அப்படி வருபவர்களெல்லாம் ஏதேனும் ஒரு வகையில் துயரம் அனுபவிப்பவர்களாகவும், அதுவே தொடரக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்.
அந்த உண்மையை நீங்கள் அப்படியே சொல்கிறீர்கள்…’’ ‘‘ஆமாம், ஆனால், என்னைப்போலவே பல ஜோதிடர்கள் இருக்கிறார்கள்… உதாரணமாக எங்கள் பகுதியிலேயே வசிக்கும் சபாபதி… வந்து நான் சொல்கிறேனென்று என்னைத் தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள்… அவர் கணித்துச் சொல்லும் ஜாதகக்காரர்கள் எல்லாம் சீரும், சிறப்புமாக வாழ்கிறார்கள்; அவரைப் பற்றி நல்லவிதமாக நாலுபேரிடம் சொல்கிறார்கள்… நான் சரியாகத்தான் கணித்துச் சொல்கிறேன். இருந்தும்…’’ அவரை ஆழ்ந்து பார்த்தார் முதியவர். ‘‘இதைத்தான் உங்களுடைய ராசி என்று நான் சொன்னேன். அதாவது, உங்கள் ராசிப்படி உங்களிடம் ஜோதிடம் பார்க்க வருகிறவர்கள் துன்பம் சுமந்தவர்களாகவே இருக்கிறார்கள்;
அவர்களுடைய ஜாதகப்படி அந்தத் துன்பங்கள் இன்னும் சில காலத்துக்குத் தொடரக்கூடியதாகவே இருக்கின்றன. அதைத்தான், அந்த உண்மையைத்தான் நீங்கள் மிகச் சரியாகச் சொல்கிறீர்கள். ஆனால், நீங்கள் குறிப்பிட்ட சபாபதியிடம் வரக்கூடியவர்கள் பெருந்துயரம் கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன். அல்லது கஷ்டம் இருக்கக்கூடியவர்களும் வெகு விரைவில், இரண்டொரு நாளில் அந்த கஷ்டம் தீரக்கூடியவர்களாக இருப்பார்கள். அதனால் அவர் சொல்வது உடனே பலிக்கிறது; ஜாதகர்களும் சந்தோஷப்படுகிறார்கள்…’’ ‘‘அப்படியென்றால்…’’
‘‘உங்களுக்கு நல்ல நேரம் வரும்வரை நீங்கள் பொறுத்திருக்க வேண்டியதுதான்,’’ என்று சொல்லிச் சிரித்தார் முதியவர். ‘‘ஆரோக்கியமான ஜாதகர்கள் வரும்வரை எதிர்மறையான பலன்களைச் சொல்லித்தான் தீரவேண்டும் என்ற கட்டாயம் வருமானால் அதைப் பக்குவமாக, இதமாக, கேட்பவர் ஆறுதல் அடையுமாறு சொல்லிப் பழகுங்கள். உங்கள் பிரச்னையும் விரைவில் தீரும்!’’ தாண்டவன் தனக்குள் சிரித்துக்கொண்டார். தனக்கும் நல்ல நேரம் வரும்வரை, தன்னிடம் வருவோருக்கு, பட்டவர்த்தனமாகச் சொல்லாமல், ஆறுதலாகப் பலன் சொல்வது என்று தீர்மானித்துக்கொண்டார்.
Comments
Post a Comment